ஆனைமலை : ஆனைமலை அடுத்த கணபதிபாளையம் அருகே ஐந்து ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அங்காளீஸ்வரி வீரமாச்சியம்மன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. ஆனைமலை கணபதிபாளையம் அருகே பாறைமேடு உள்ளது. இங்குள்ள அங்காளீஸ்வரி வீரமாச்சியம்மன் கோவில் 60 ஆண்டுகள் பழமையானது.ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குள் கோவில் நிர்வாகத்தில் ஏற்பட்ட தகராறில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் பூட்டப்பட்டது.கோவில் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.டி.ஓ., அழகிரிசாமி முன்னிலையில் நேற்று கோவில் திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., ஆறுமுகம், மார்ச்சநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலமேலுமங்கை, கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர். கோவிலுக்குள் இருந்த மூன்று பெட்டிகளுக்குள் பல சாமி சிலைகள் மற்றும் நகைகள் இருந்தன. இந்த சிலைகள் ஐம்பொன் சிலைகள் என்று கூறப்படுகிறது. சிலைகளை சோதனை செய்த பின் அந்த பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., பெட்டியின் சாவிகளை எடுத்துக்கொண்டு, கோவிலின் சாவிகளை ஊராட்சி தலைவரிடம் ஒப்படைத்தார்.ஒரு வாரத்திற்குள் பிரச்னைக்குரிய இரு தரப்பினரிடமும் பேசி கோவில் நிர்வாகம் சம்பந்தமாக முடிவெடுப்பதாக கூறினார். நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த கோவில் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.