பதிவு செய்த நாள்
20
ஜூலை
2011
12:07
சேலம் : சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், உண்டியல் மூலம் ஒரு மாதத்தில், 4 லட்சத்து, 7, 970 ரூபாய் வசூலாகியுள்ளது. சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், பெருவாரியான மக்களின் வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கோட்டை மாரியம்மன் கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் இருந்து காணிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுப்பது வழக்கம். கடந்த ஜூன் 20ம் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்ட போது, பக்தர்கள், 5 லட்சத்து, 59 ஆயிரத்து, 792 ரூபாய் கணிக்கை செலுத்தியிருந்தனர். கடந்த மாதம் உண்டியலில் இருந்து காணிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஆடி பண்டிகை துவங்குவதால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிரந்தர மற்றும் திருப்பணி உண்டியலை திறந்து நேற்று காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாரியம்மன் கோவிலில் நிரந்தரமாக வைக்கப்பட்ட பத்து உண்டியலும், திருப்பணிக்காக வைத்த ஒரு உண்டியலும் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வரதராஜன், சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், இரண்டாம் பூட்டு அலுவலரும், ஆய்வளாருமான தமிழரசு, கோவில் நிர்வாக அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில், பத்து நிரந்தர உண்டியல் மற்றும் ஒரு திருப்பணி உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணியில், 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியலில், 3 லட்சத்து, 2,562 ரூபாய், 35 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து, 5,408 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில், 4 லட்சத்து 7, 970 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.