திருமங்கலம்: திருமங்கலத்தில் மீனாட்சி- சொக்கநாதர் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு, இங்கிருந்து தான் திருமாங்கல்யம் செய்து கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை.இந்தாண்டு தொடக்கத்தில், உபயதாரர்களால் மராமத்து பணிகள் துவங்கின. புதிய மண்டபமும் அமைக்கப்பட்டது. தற்போது மராமத்து பணி, சிலைகளுக்கு வர்ணம் தீட்டி புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு நிதி இல்லை. அரசும் நிதி ஒதுக்காததால் கும்பாபிஷேக பணி தாமதமாகிறது.நிர்வாக அலுவலர் மாலதி கூறுகையில், விரைவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கோயில் தெப்பக்குளம் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஆவணம் கிடைத்தவுடன், அதுவும் மீட்கப்படும் என்றார்.