பதிவு செய்த நாள்
03
செப்
2015
05:09
காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 1998ல் நடந்தது. அதற்கு பின் 17 ஆண்டுக்கு பின் இக்கோயிலில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உபயதாரர்கள் நிதியை கொண்டு, ஆலய திருப்பணிகள் நடந்து முடிந்தன.
கும்பாபிஷேகம்: காலை 7:45 மணி முதல் 11 மணி வரை சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி அம்மன் சன்னதி முன், கோயில் சிவாச்சாரியார்கள், விநாயகருக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடத்தி, கணபதி ஹோமம் செய்தனர். பின், கோயில் ஸ்தானிகர் ஆர்.காளீஸ்வர குருக்கள், அலங்கரிக்கப்பட்ட கோயில் யானை சொர்ணவல்லிக்கு கஜபூஜை செய்தார். செப்.4ம் தேதி காலை 9 மணிக்கு 11:30 மணிக்குள் மகாலட்சுமி ஹோமம், தன பூஜை நடக்கிறது. செப்டம்பர் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்குகின்றன. 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.