பதிவு செய்த நாள்
04
செப்
2015
10:09
கோவை: எலி, பூனையை ஒரே பானைக்குள் அடைத்து குழிக்குள் புதைக்கும், விசித்திர திருவிழா, கோவை அருகே நேற்றிரவு நடந்தது. கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே இடிகரை மாரியம்மன் கோவிலில் நடந்த இந்த வினோத திருவிழாவை யொட்டி, நேற்று காலை எலி பிடித்தல், மாலை பொலிகாளை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து அலங்காரத்துடன் அழைத்து வரப்பட்ட பொலிகாளைகள் பங்கேற்றன. பின், இடிகரை ஊர்கவுண்டர் வீட்டிலிருந்து, பூனை, எலி அடைக்கப்பட்டு, வெள்ளைத் துணியால் வாய்ப்பகுதி மூடப்பட்ட பானை எடுத்து வரப்பட்டது. பானையை, கோவில் எதிரே இண்டு அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் வைத்து, அதை மூங்கில் தட்டி, தென்னை ஓலைகளால் மூடினர். குழியைச் சுற்றியும் தாரை, தப்பட்டை முழங்க பக்தர்கள் ஆடினர். பின் பொலிகாளைகள், குழியைச் சுற்றி வலம் வந்தன. இதன் பின், குழிக்குள் இருந்த பானை மீண்டும் ஊர்வலமாக, ஊர்கவுண்டர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பானையை திறந்தனர். உள்ளே இருந்த பூனையும் எலியும் குதித்து வெளியே ஓடின. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில்: பூனை, எலியை ஒரே பானையில் அடைத்து வைத்து, திறந்து விடும் போது, அதில் எலி உயிருடன் வெளியே சென்றால், இவ்வுலக மக்கள், எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. தற்போது, எலி உயிருடன் வெளியே சென்றதால், உலக மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்றனர். கடந்த மாதம் 21ம் தேதி திருச்சாட்டு நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. இன்று மஞ்சள் நீராடுதல், வசந்த விழாவுடன் நிறைவடைகிறது.