பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில், ரெங்கநாதர் பவித்ரோத்ஸவ உற்சவம், தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவடைந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த, ஆகஸ்ட், 26ம் தேதி, பவித்ரோத்ஸவ விழா துவங்கியது. தொடர்ந்து, ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த விழா, நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவடைந்தது. விழாவையொட்டி, தினமும் மாலையில், நம்பெருமாள் பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். விழாவில், ஏழாம் நாளான, கடந்த, 1ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன், நெல்லளவு கண்டருளினார். பவித்ரோத்ஸவ விழா நிறைவையொட்டி, நேற்று காலை, 8.30 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்திரபுஷ்கரணிக்கு வந்தடைந்தார். அங்கு காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரால், நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். அங்கிருந்து, பவித்ரோத்ஸவ மண்டபத்துக்கு சென்ற நம்பெருமாள், மாலை, 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். தொடர்ந்து, பக்தர்களுக்கு சேஸவை சாதித்த ஸ்வாமி, இரவு, 8.30 மணிக்கு பவித்ரோத்ஸவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மூலஸ்தானம் சென்றடைந்தார். அங்கு, வாதூல தேசிகர் திருபவித்ர மரியாதையுடன் பவித்ரோத்ஸவ விழா நிறைவடைந்தது.