புதுச்சேரி: அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் அன்னதான திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி செயின்ட் தெரெஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் மூன்று நாள் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 4ம் தேதி சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான 5ம் தேதி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரனின் உபன்யாசம் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று நித்திய அன்னதான திட்டத்தைஅரசு கொறடா நேரு துவக்கி வைத்தார். மட சிறப்பு அதிகாரி அன்புசெல்வம் பேசும் போது தினமும் காலை 11 மணிக்கு ரங்கநாத சுவாமிக்கு நெய்வேத்தியத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என்றார். அறநிலையத்துறை தில்லைவேலு, வணிக வரித் துறை ஆணையர் மதிவாணன், சிறப்பு அதிகாரி அன்புசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு ராமானுஜர் ஓர் ஆன்மிகம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு நடந்த உறியடி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்றனர்.