துவாரகையில் ஆட்சி செய்யும் துவாரகா நாதனை சிறு வயதிலிருந்தே வணங்கியவள் மீரா. தமிழகத்தின் ஆண்டாள் போல,குஜராத்தில் கிருஷ்ண பக்தியில் தலைசிறந்து திகழ்ந்தவள். ஒருமுறை மீராவின் வீட்டுக்கு வந்த துறவி ஒருவரிடம் இருந்த கிருஷ்ண விக்ரகத்தை பெற்ற மீரா, வாழ்நாளின் இறுதிவரை பூஜித்தாள். அந்த கிருஷ்ணனை வழிபாடு செய்யாமல் அவள் சாப்பிட்டதில்லை. தன் உடல், உயிர், உணர்வு எல்லாவற்றையும் கிருஷ்ணருக்கே என அர்ப்பணித்தாள். கிருஷ்ணபக்திபாடல்களைத் தானாகவே இயற்றி படிப்பாள். அவளது பாடல்கள் கல் மனத்தையும் கரைப்பதாக இருந்தது. மணப்பருவம் எய்திய மீரா, மேவார் நாட்டு மன்னன் போஜராஜனை மணந்தாள்.ஆனாலும், குடும்ப வாழ்க்கையை விட கிருஷ்ண பக்தியில் லயித்தாள். இதனால், சில வஞ்சகர்கள் மீராவுக்கு கிருஷ்ணனின் பிரசாதம் என்று சொல்லி விஷப் பாலைக் கொடுத்தனர். அப்போது துவாரகை கண்ணன் சன்னிதி தானாகவே மூடிக்கொண்டது. மேவாரிலிருந்து சுடுமணலில் பித்துப்பிடித்தவள் போல நடந்த, மீரா சன்னிதியை அடைந்தவுடன் கதவுகள் திறந்து கொண்டன. அவள் தன் இனிமையான குரலில் கானம் பாடி, கிருஷ்ணனோடு இரண்டறக் கலந்தாள்.