பூஜை முடிந்து பிரசாதம் கொடுக்கும் போது ஒழுங்கற்ற முறையில் பலரும் வாங்குகிறார்கள். கடவுளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதத்தை எல்லாரும் பகிர்ந்து உண்ண வேண்டும். சிலர் பிரசாதமே வேண்டொமென சென்று விடுகிறார்கள். சிலர் அதைப் பெற சண்டை போடுகிறார்கள். இந்த இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதத்துக்கு தனி மரியாதை இருக்கிறது.பிரசாதத்தை ப்ர+சாதம் என பிரிப்பர். ப்ர என்றால் கடவுள். கடவுளுக்கு படைக்கப்பட்ட சாதம் என்பதால் இதற்கு மதிப்பு அதிகம். தெய்வங்கள் மனிதனைப் போல் நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவற்றின் பார்வை மட்டுமே அதில் படுகிறது. இதை சமஸ்கிருதத்தில் த்ருஷ்டி போக் என்பர். கண்ணொளி பட்டது என்பது இதன் பொருள். தெய்வத்தின் கண்ணொளி பட்ட பொருள் புனிதத்தன்மை பெறுகிறது. இதைச் சாப்பிடுபவர்களின் மனம் தூய்மையடைகிறது. உள்ளத்தில் பக்தியை உருவாக்குகிறது. எனவே, பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வரிசையில் நின்று, உரிய மரியாதையுடன் பெற்றுச் சொல்ல வேண்டும். பிரசாதத்தை பகிர்ந்து சாப்பிடும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.