பதிவு செய்த நாள்
12
செப்
2015
11:09
பெங்களூரு:தசரா உற்சவத்தின் ஜம்பு சவாரியில், தங்க அம்பாரி சுமக்கும் அர்ஜுனா யானை, இம்முறையும், வலுவாக இருக்கிறேன் என, நிரூபித்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 345 கிலோ எடை கூடியுள்ளது.தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் பொருட்டு, மைசூருக்கு வந்துள்ள ஆறு யானைகள் குழு, அம்பாவிலாஸ் அரண்மனை வளாகத்தில் முகாமிட்டு உள்ளன. எடை சோதனை:தன்வந்திரி சாலையில் உள்ள சாயிராம் எலக்ட்ரானிக் எடை மிஷினில், யானைகளின் எடை பரிசோதிக்கப்பட்டது.
அதாவது, 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்து செல்லும், 55 வயதான, கேப்டன் அர்ஜுனாவின் எடை, கடந்த ஆண்டு, 5,100 கிலோவாக இருந்தது. இந்நிலையில், தற்போது, 5,445 கிலோவாக உள்ளது. இதன்மூலம், தங்க அம்பாரியை சுமக்க தயாராக இருக்கிறேன் என, நிரூபித்துள்ளது.சிறப்பு உணவுமைசூரு வனவிலங்குகள் பிரிவு அதிகாரி கமலா கரிகாலன் கூறியதாவது:யானைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க, அவைகளின் எடை பரிசோதிக்கப்படுகிறது. தசரா முடிந்த பின்னரும், யானைகளின் எடை பரிசோதிக்கப்படும். ஜம்பு சவாரியில் பங்கேற்கும் யானைகளின் உடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், சிறப்பு உணவு தரப்படுகிறது. அனைத்து யானைகளுக்கும் அரிசி, வெல்லம், நெல், உளுந்தம் பருப்பு, தேங்காய், கீரை, காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்தான உணவு தரப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
யானைகளுக்கு பயிற்சி: கடந்த, 10 மாதங்களாக, காட்டில் வாழ்ந்து வந்த யானைகள், நகர பகுதி சூழ்நிலைக்கு பொருந்தி கொள்வது கடினம் என்பதால், தசரா துவங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே, யானைகளை நகருக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கப்படும்.இந்நிலையில், அரண்மனை வளாகத்தில் முகாமிட்டுள்ள யானைகளுக்கு காலையில் உணவு கொடுத்து பயிற்சியை துவக்குகின்றனர். அரண்மனை வளாகத்திலிருந்து, சயாஜி சாலை வழியாக பன்னி மண்டபம் வரை அழைத்து சென்று, தினமும் பல்வேறு வகை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வாகனங்களின் சத்தம், மக்கள் நெருக்கடிக்கு இடையில் தினமும் பயிற்சி அளிப்பதால், யானைகள் படிப்படியாக தசரா ஊர்வலத்துக்கு தயாராகும்.தசரா விழாவிற்காக அழைத்து வரப்பட்ட, அர்ஜுனா, பலராமா, அபிமன்யூ, சைத்ரா, விக்ரம், காவேரி யானைகளுக்கு தினமும் எடை பார்க்கப்படுகிறது. அவைகளின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவு கொடுக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், இரண்டாம் கட்டமாக யானைகள், மைசூரு வரவுள்ளன.