இளையான்குடி: தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று முதல் பணி செய்து வருகின்றனர். தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.இதில் வருமானம் வரக்கூடிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தந்த கோயில்களின் வருமானத்தை பொறுத்து சம்பளம் அறநிலையத்துறை ஆணையரால் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல்வர் சட்டப் பேரவையில் விதி 110ன் கீழ் அறிவித்துள்ளபடி தற்காலிக பணியாளர்களுக்கு பணி வரன் முறை செய்தல், பணி கொடை வழங்குதல், ஓய்வூதியம் உயர்வு வழங்குதல், பதவி <உயர்வு வழங்குதல்,அரசு ஊழியர்களுக்கு இணையாக தர ஊதியம் மற்றும் விடுப்புச் சலுகை வழங்குதல் உட்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோயில் பணியாளர்கள் மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.முதல் கட்டமாக நேற்று கோயில் பணியாளர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணி செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட செயலாளர் அழகுபாண்டி கூறுகையில்,"கோயில் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும்,ஆணையர் அலுவலகம் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளோம். முதல் கட்டமாக செப் 15ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து வருகிறோம். 2ம் கட்டமாக செப் 16 முதல் செப் 22ம் தேதி வரை தினமும் கோயில் முன்பு ஒரு மணி நேரம் கோரிக்கைகளை பக்தர்களுக்கு முன்பு படிக்கும் போராட்டம், 3ம் கட்டமாக செப் 23ல் சென்னையில் ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது, என்றார்.