பதிவு செய்த நாள்
14
செப்
2015 
11:09
 
 தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஆவணி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கடந்த, ஆகஸ்ட், 10ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, பூர்வாக பூஜைகள், கொடியேற்றம், முத்துப்பல்லக்கு, விடையாற்றி விழா நடந்தது. கடந்த, 23ம் தேதி, ஆவணி மாத முதல் வாரத்தை முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது. கடந்த, 5ம் தேதி முதல் நாள், பெரிய காப்பு விழா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது. நேற்று, ஆவணி மாத நான்காம் வாரத்தை முன்னிட்டு, மாலையில் தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (செப்., 15)கொடியிறக்கம் விழா நடக்கிறது. வரும், அக்டோபர், 4ம் தேதி தெப்ப திருவிழாவும், 8ம் தேதி தெப்ப விடையாற்றி விழாவுடன், ஆவணி மாத பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.