பதிவு செய்த நாள்
16
செப்
2015
11:09
பழநி: புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக பழநி புஷ்ப கைங்கர்ய சபா மூலம் திருப்பதிக்கு 6 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல்லிருந்து 700 கிலோ பூக்கள் திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. பழநி புஷ்ப கைங்கர்ய சபா மூலம் திண்டுக்கல், நிலக்கோட்டை, திருச்சி, போன்ற பகுதிகளிலிருந்து பூக்கள் பெறப்பட்டு, ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி, பிரம்மோற்சவ விழாவிற்காக டன் கணக்கில் பூக்கள் பழநியிலிருந்து அனுப்பி வைக்கப்படும். தற்போது பழநி- திருப்பதி அரசு பஸ் போக்குவரத்து சேவை இல்லாத காரணத்தால், புஷ்ப கைங்கர்யா சபா மூலம் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிப்பட்ட 700 கிலோ பூக்களை திண்டுக்கல்லிருந்து திருப்பதிக்கு அனுப்பிவைத்தனர். ஏற்பாடுகளை சபா நிர்வாகிகள் ஹரிஹரமுத்து, சின்னச்சாமி, சிற்றம்பலம் நடராஜன் உள்ளிட்டோர் செய்கின்றனர்.
சபா பொருளாளர் மருதசாமி கூறுகையில்,“13 ஆண்டுகளாக திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு டன் கணக்கில் பூக்களை அனுப்புகிறோம். இவ்வாண்டு இருமுறை பிரம்மோற்சவ விழா திருப்பதியில் நடக்கிறது. அதற்காக முதற்கட்டமாக துளசி, வடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை அனுப்பிவைக்கிறோம். தொடர்ந்து பூக்களை சேகரித்து பிரம்மோற்சவ செப்., 24 வரை 6 டன் பூக்களை அனுப்புவோம். இதுபோக புரட்டாசிசனிக்கிழமை, பிற விசேஷ நாட்களிலும் திருப்பதி தேவஸ்தானம் ஆர்டரின் பெயரில் பூக்களை சேகரித்து அனுப்புகிறோம். பழநி-திருப்பதி பஸ் சேவை மீண்டும் துவங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார். திருப்பதிக்கு பூக்களை அனுப்ப விரும்புவோர் 94434 03026 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.