பதிவு செய்த நாள்
16
செப்
2015
11:09
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, சிவன் கோவில் பூசாரி ஜீவ சமாதி அடைய போவதாக வந்த தகவலை தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அவரை காண குவிந்ததால், வருவாய்த்துறை அதிகாரிகள் பூசாரியை அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, அய்யூர் அருகே உள்ள குருபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாராச்சாரி, 90. இவரது மனைவி ருக்மணியம்மாள், 78. கடந்த, 30 ஆண்டுக்கும் மேலாக, குருபட்டி அடுத்த காட்டு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் மாராச்சாரி பூசாரியாக இருந்து வருகிறார். சிவ பக்தரான இவர், சிவன் கோவில் அருகே குழி ஒன்றை தோண்டி, அதில் தான் இறந்தவுடன் புதைக்க வேண்டும் என, கிராம மக்களை கேட்டு கொண்டார். இந்நிலையில், நேற்று காலை, 9 மணியில் இருந்து, 10 மணிக்குள் பூசாரி மாராச்சாரி ஜீவசமாதி அடைய இருப்பதாக நேற்று முன்தினம் வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. அதன் பேரில் அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், மாராச்சாரியை சந்தித்து பேசினர். அப்போது தான் இறந்த பின்னர் தான் தன்னை புதைக்க வேண்டும் என்றும், தான் ஜீவ சமாதி அடைய போவதாக கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சிவபெருமானை நினைத்து, கடந்த சில நாட்களாக உண்ணா நோண்பு இருந்து வரும் பூசாரி மாராச்சாரி, நேற்று முன்தினம் முழுவதும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த செய்தி நேற்று காலை நாளிதழ்களில் வந்ததை பார்த்து விட்டு, ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், குருபட்டி சிவன் கோவிலில் குவிந்தனர். அங்கு ஒரு சில பக்தர்கள் பஜனையில் ஈடுபட்டனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமாகவே, தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோவிந்தன் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் குருபட்டி சிவன் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று மதியம் பூசாரி மாராச்சாரியை, கிராமத்திற்கு அழைத்து செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, 30 ஆண்டுகளுக்கு பின்னர், பூசாரி மாராச்சாரி தனது குருபட்டி கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனாலும், பக்தர்கள் பலர் மாராச்சாரியை பின்தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்து ஆசி பெற்று சென்றனர். பூசாரி மாராச்சாரி ஜீவ சமாதி அடைவதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த, இரு நாட்களாக குருபட்டி பகுதியில் பரபரப்பு நிலவியது.