பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்: சந்தனக்காப்பில் விநாயகர் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2015 05:09
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. கற்பக விநாயகரை சந்தனக்காப்பில் பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழா,செப்.8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் திருநாளாக தேரோட்டம் நடந்தது. காலை 8 மணிக்கு தேரில் கற்பகவிநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் பக்தர்களின் தரிசனத்திற்கு எழுந்தருளினர். காலை முதல் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.30 மணிக்கு மூலவர் கற்பகவிநாயகர் தங்கக் கவசத்திலிருந்து சந்தனக்காப்பு அலங்காரத்திற்கு மாறினார். ஆண்டுக்கு ஓரு முறையாக தேரோட்டம் அன்று தான் மூலவர் சந்தனக் காப்பில் அருள்பாலிப்பார் என்பதால் பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. சண்டிகேஸ்வரர் தேரை பெண்களும் குழந்தைகளும் உற்சாகமாக இழுத்துச் சென்றனர்.