பதிவு செய்த நாள்
21
செப்
2015
11:09
மதுரை : மதுரையின் வரலாற்றை பறைசாற்றி வரும் புராதன இடங்களை, மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை பராமரிப்பதில் கோட்டை விடுவதால், அவை அமைந்திருக்கும் இடங்களுக்கு செல்ல வழி இல்லாத நிலை உருவாகி வருகிறது. மாவட்டத்தில் குகைகள், குடவறை கோயில்கள், அரண்மனையை வரலாற்று சிறப்பு மிக்க சின்னங்களாக அறிவித்து, மத்திய, மாநில தொல்லியல் துறைகள் பராமரிக்கின்றன. மாங்குளம், யானைமலை, திருவாதவூர், கருங்காலக்குடி, வரிச்சியூர், கொங்கற்புளியங்குளம் கல்வெட்டு குகைகள் மற்றும் யானைமலை லாடன் கோயில், அரிட்டாபட்டி குடவறை சிவன் கோயில், வரிச்சியூர் அஸ்தகிரீசுவரர், உதயகிரீஸ்வரர் கோயில்கள், திருமலை நாயக்கர் மகால், பத்துதுாண் பகுதிகள் மாநில தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
திருப்பரங்குன்றம், அழகர்மலை, கீழவளவு, முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி பகுதி சின்னங்கள் மற்றும் கீழக்குயில்குடி சமணர் மலை, தென்பரங்குன்றம் உமையாண்டார் கோயில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த புராதன சின்னங்களை பராமரிக்க பணியாளர்கள் இல்லாததால், தடுப்பு கம்பிகள், பூட்டுகள் எல்லாம் உடைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகள், கற்சிற்பங்கள் சிதைக்கப்படுகின்றன. மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுள்ள குகைக்கு செல்வோர் பாதி வழிவரை சென்ற பின், எப்படி செல்ல வேண்டும் என தெரியாமல் தடுமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடர்கிறது. இக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் அழைத்துக் கொண்டு தான் செல்லும் நிலை உள்ளது. செல்லும் வழியை கூட தொல்லியல் துறை மக்களுக்கு தெரியும்படி அடையாளப்படுத்தவில்லை.
திருப்பரங்குன்றம் மலையில் அமண் பாழி கற்படுகைகள் உள்ள குகைக்கு தென்பரங்குன்றம் பகுதியில் இருந்து செல்ல வேண்டும். மலைக்கு செல்லும் படிக்கட்டுகள் அழகாக காட்சி தருகின்றன. ஆனால் செல்ல வழியில்லை. இருக்கும் ஒற்றையடி பாதையையும், இப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கும் தெரியாதநிலையில் உள்ளது.இதே நிலை தான் அனைத்து இடங்களிலும் உள்ளன. தொல்லியல் சின்னங்கள் உள்ள இடங்களை பாதுகாக்க அப்பகுதி கிராம மக்களை கொண்ட குழுக்கள் அமைக்க, சில மாதங்களுக்கு முன் மாநில தொல்லியல் துறை முயற்சி எடுத்தது. அதுவும் நிறைவேறாமல் கிடப்பில் உள்ளது.
சமீபத்தில் மத்திய தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்தியது. ரூ.பல லட்சம் செலவு செய்து பல வரலாற்று சான்றுகளை கண்டெடுத்தது. ஆனால் இங்கு உலக வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கும் வகையில் கல்வெட்டுகளாக இருக்கும் தொல்லியல் சின்னங்களை இன்னும் பாதுகாக்க இத்துறைகள் தவறி வருகின்றன.ஒவ்வொரு தொல்லியல் சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் பாதைகள், அதற்கான வழிகாட்டி பலகைகள் அமைத்தால், மக்கள் அந்த பகுதிகளுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்புகள் உருவாகும். இருக்கும் சின்னங்களும் பாதுகாக்கும் வழிகளும் உருவாகும். தொல்லியல் துறைகள் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.