பதிவு செய்த நாள்
21
செப்
2015
11:09
திருப்பூர் : சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், விசர்ஜனத்துக்காக நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, சூரிய பகவான் ரதத்தில் விநாயகர் எழுந்தருளிய காட்சி ரதம், புலியாட்டம், மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சி அமைப்பு, சாரட் வண்டியில் விநாயகர் சிலை புறப்பட, செண்டை மேளத்துடன், கோலாகலமாக ஊர்வலம் நடந்தது. இவை, பார்வையாளர்களை வசீகரித்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி சார்பில், 17ல், திருப்பூர் நகர்ப்பகுதியில், 700 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நான்கு நாட்களாக, சிறப்பு பூஜை, விளையாட்டு போட்டி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும், விசர்ஜன ஊர்வலம், நேற்று நடைபெற்றது.
வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 427 சிலைகளின் ஊர்வலம், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கியது; மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிஷோர் குமார், கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்து முன்னணி தொண்டர் கள் கொடி அணிவகுப்பு; ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, சூரிய பகவான் ரதத்தில் விநாயகர் எழுந்தருளல் காட்சி ரதம்; கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த, ஐந்து தலை நாகம் மீது, நின்றிருந்த கிருஷ்ணர் ரதம்; நரசிம்ம அவதார ரதம்; புலி ஆட்டம், செண்டை மேளம், தப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.
பின், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. புதிய பஸ் ஸ்டாண்ட், 60 அடி ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப், ரயில்வே மேம்பாலம் வழியாக, ஆலங் காடு வந்தது. அங்கு, பொதுக்கூட்டம் நடந் தது. பின், சாமளாபுரம் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்துக்காக, பி.என்., ரோடு, குமரன் ரோடுகளில், போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலத்தில் அசத்தல்: திருப்பூர் தெற்கு பகுதியில், 235 இடங்களில் இருந்த சிலைகள், தாராபுரம் ரோடு தலைமை அரசு மருத்துவமனை அருகே கொண்டு வரப்பட்டன. ஊர்வலத்தை, இந்திய தொழில் கூட்டமைப்பு மாநில கவுன்சில் பிரதிநிதி ராஜா சண்முகம் துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம், ரத்தினசாமி, பத்மநாபன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, காவடி ஆட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன், மகிஷாசுரனை வதம் செய்வது போன்ற ரதம், பலரையும் கவர்ந்தது. அதேபோல், "சாரட் வண்டியில் வந்த விநாய கருக்கு, ஆரவார வரவேற்பு கிடைத்தது. உடலில் புலி உருவம் வரைந்து சென்றவர்களை, பலரும் ரசித்தனர். புதூர் பிரிவு, பெரிச்சிபாளையம், தென்னம்பாளையம், டி.கே.டி., பஸ் ஸ்டாப், பழைய பஸ் ஸ்டாண்ட், டைமண்ட் தியேட்டர் வழியாக, ஊர்வலம் ஆலாங்காடு சென்றடைந்தது.
தடைபட்ட ஊர்வலம்: திருப்பூர் மேற்கு ஒன்றிய அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 70 சிலைகள், செல்லம் நகர் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன. கவுன்சிலர் திருப்பதி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பத்மநாபன் உடனிருந்தனர். கே.டி.சி., பள்ளி வீதி, வேப்பங்காடு பங்களா வழியாக, தெற்கு தோட்டம் சென்றபோது, மரக்கிளைகளால், ஊர்வலம் சிறிதுநேரம் தடைபட்டது. மரக்கிளைகள் அகற்றப்பட்டு, பின்னர் துவங்கிய ஊர்வலம், மேற்கு பிள்ளையார் கோவில் வழியாக, ஆலங்காடு சென்றடைந்தது.
போலீஸ் பாதுகாப்பு: திருப்பூர், 43வது வார்டு பெரியதோட்டம் மற்றும் கே.பி.என்., காலனி பகுதிகளில், 2013ல், தகராறு ஏற்பட்டதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. பெரியதோட்டம் மற்றும் கே.பி.என்., காலனி பகுதிகளில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள், வெள்ளியங்காடு பிரிவுக்கு, நேற்று கொண்டு வரப் பட்டன. சிலைகளுக்கு பூசணிக்காய் சுற்றி, திருஷ்டி கழித்து, மேளதாளங்களுடன், வேன்களில் எடுத்துச் செல்லப்பட்டன. பதற்றம் நிறைந்த பகுதிகளில், உதவி கமிஷனர் மணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சில இடங்களில், "பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஊர்வலம், அமைதியாக நடைபெற்றது.