பதிவு செய்த நாள்
21
செப்
2015
12:09
மேட்டுப்பாளையம்: காரமடை, சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், மேட்டுப்பாளையத்தில், 73; காரமடை நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில், 100; சிறுமுகை பகுதியில், 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக அந்தந்த பகுதியில், பல்வேறு போட்டிகளை அமைப்பினர் நடத்தினர். காரமடை ஒன்றியத்தில் இந்து முன்னணி சார்பில் வைத்த, விநாயகர் சிலைகள் அனைத்தும், கணுவாய்ப்பாளையம் பிரிவில் வரிசையாக நிறுத்தப்பட்டன. பின் அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் தேவனாபுரம், தேக்கம்பட்டி வழியாக வனபத்ரகாளியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு பவானி ஆற்றில் சிலைகளை விசர்ஜனம் செய்தனர்.
சிறுமுகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி சார்பில், 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அனைத்து சிலைகளின் விசர்ஜன ஊர்வலம், நால்ரோட்டில் இருந்து துவங்கியது. சர்வமங்கள தியான பீட குருஜி காவிக் கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் ஜீவா நகர், மார்க்கெட், ராமர்கோவில் வழியாக பழத்தோட்டத்தில் உள்ள சுப்ரமணியர் சுவாமி கோவில் அருகே பவானி ஆற்றில் சிலைகளை கரைத்தனர். மேட்டுப்பாளையம் நகரில் வைத்த அனைத்து விநாயகர் சிலைகளும், காரமடைரோடு சி.டி.சி., டெப்போ முன்பு வரிசையாக நிறுத்தினர். அனைத்து சிலைகளும் கோ-ஆப்ரேட்டிவ் காலனியை அடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்திற்கு, கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.