அவிநாசி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அவிநாசி ஷீரடி சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன.அவிநாசி - கோவை பைபாஸ் ரோடு அருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது; இதையொட்டி, சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை, மங்கல ஆரத்தி நடைபெற்றன.திருப்பூர் ஸ்ரீசாய் கிருஷ்ணா நாட்டியாலயா குழுவினரின், "ஷீரடி சாய்பாபா என்றொரு மகான் என்ற தலைப்பில், நாட்டியம் இடம் பெற்றது. சண்முகசுந்தரம் குழுவினரின், சிறப்பு சாய் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. * கருவலூர் - கானூர் ரோட்டில் உள்ள, தொட்டக்களம்புதூர் ஸ்ரீசங்கர சேவாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இல்ல குழந்தைகளே உருவாக்கிய விநாயகர் சிலைக்கு, அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். "முழு முதற்கடவுள் என்ற தலைப்பில், சேவாலய பொறுப்பாளர் விஜய நாராயணன் சிறப்புரை ஆற்றினார். நிர்வாகி சிந்து குமாரி நன்றி கூறினார்.