ஒருவர் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கிறார். பகலில் துளசியும், தீர்த்தமும் மட்டும் தான் சாப்பிட வேண்டும். மாலையில், பெருமாள் கோவிலுக்கு போய் வந்த பிறகு இரண்டு இட்லியைக் கண்ணால் பார்க்க முடியும் என்ற நிலை. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். பசி தாளாமல், இவர் மதியமே சாம்பார் சாதத்தை வெளுத்துக் கட்டி விட்டார். பிறகென்ன! கண்ணை அசத்தியது. ஒரு மணி நேரம் துõக்கம்...மாலையில் பெருமாள் கோவிலுக்கு புறப்படும் சமயம். மனதில் ஒரு பயம். விரதம் இருக்கப் போவதாக சங்கல்பம் (உறுதி) செய்து விட்டு, இப்போது போனால் பெருமாள் நம் வணக்கத்தை ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகம்... வேண்டாம்...கோவிலுக்கு இன்று வேண்டாம், இன்னும் இரண்டு புரட்டாசி சனி வரத்தானே போகிறது... அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போட்டு விட்டார். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மை தான். அதே நேரம் பகவான் கதை கேட்டால் அந்த பசியும் பறந்து போய் விடும் என்பது பரீட்சித்து மகாராஜா கண்ட அனுபவ உண்மை. அந்த ராஜா இன்னும் சில நாட்களில் மடிந்து விடுவார் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, கிளி மூக்கு கொண்டவரும், வியாசரின் மகனுமான சுகப்பிரம்ம மகரிஷியைச் சந்தித்தார். அவர் திருமாலின் பெருமையை அவருக்கு எடுத்துச் சொன்னார். குறிப்பாக, கிருஷ்ணாவதார மகிமையை மிகச்சிறப்பாக சொன்னார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பரீட்சித்துவுக்கு பசி மட்டுமல்ல.. உயிர் போகப் போகிறதே என்ற எண்ணம் கூட மறந்து விட்டது. எனவே, விரதநாளில் பெருமாளின் திவ்யமான சரித்திரத்தைப் படியுங்கள் அல்லது கேளுங்கள். அதிலேயே மூழ்கி விடுங்கள். இவ்வாறு செய்தால், புரட்டாசி சனியன்று பசி உங்களை எட்டிப் பார்க்குமா என்ன!