பதிவு செய்த நாள்
28
செப்
2015
10:09
பெங்களூரு:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏரிகளில் கரைக்கப்பட்டன. பெங்களூரில் சிவாஜி நகர், ஹலசூரு, ராஜாஜி நகர் ஜெ.பி.நகர், மல்லேஸ்வரம். ஹெப்பால், பசவனகுடி, கங்கா நகர் எலஹங்கா, வித்யாரண்யபுரா உட்பட பல பகுதிகளில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் ஆடியபடி சென்றனர். அந்தந்த பகுதிகளிலுள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சிலைகள் கரைக்கப்பட்டன. சிவாஜிநகர், ஹலசூரு, காக்ஸ்டவுன், ஜீவனஹள்ளி, டேனரி ரோடு, இந்திரா நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள், ஹலசூரு ஏரியில் கரைக்கப்பட்டன. அங்கு வந்த ராட்சத சிலைகளை கிரேன் மூலம் கரைத்தனர். கே.ஆர்.புரா பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலைகள், தேவசந்திரா ஏரியில் கரைக்கப்பட்டன. எலஹங்கா, உபநகர், வித்யாரண்யபுரா பகுதியிலிருந்து வந்த சிலைகள், வீர சாகர ஏரியில் கரைத்தனர்.சிலை கரைப்பின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க போலீசார், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.விநாயகர் சிலை கரைப்பை முன்னிட்டு, அந்தந்த பகுதிகளிலிருந்த மதுக்கடைகளை மூடும்படி, போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.