பதிவு செய்த நாள்
29
செப்
2015
10:09
மும்பை: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், கடற்கரை மற்றும் ஏரிப்பகுதிகளில், 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கோலாகலமாக அரங்கேறிய இந்த நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பத்து நாள் பண்டிகைமகாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, 17ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து, விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கடந்த, 27ம் தேதி அதிகாலை முதல், மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கிர்காம் சவ்பட்டி, ஜுகு கடற்கரை, போவாய் ஏரி உள்ளிட்ட, பலவகை நீர்நிலைகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணிகள்இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர். சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு, மும்பை மாநகரம் முழுவதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீசார் செய்திருந்தனர். 45 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஷார்ட்சுடன் வந்த சிறுமியை நொறுக்கிய போலீஸ்: விநாயகர் சிலை கரைப்பை முன்னிட்டு, மும்பையில், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட ராஜகணபதியை தரிசிக்க, ஷார்ட்ஸ் எனும் அரைக்கால் சட்டை அணிந்து வந்த சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அடித்து விரட்டிய வீடியோ காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையின் லால்பாக் பகுதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட, ராஜகணபதியை தரிசிப்பதற்காக, ஒரு சிறுமி, தன் குடும்பத்தினருடன் காத்திருந்தாள். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அந்த சிறுமி, ஷார்ட்ஸ் அணிந்து வந்திருப்பதாக கூறி, அவரையும், குடும்பத்தினரையும் அடித்து விரட்டினர்.