பதிவு செய்த நாள்
01
அக்
2015
11:10
தேவதானப்பட்டி: தஞ்சை ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட குள்ளப்புரம் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் தேர்கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. தஞ்சையை ஆண்ட மன்னர் ராஜ ராஜ சோழன் பாண்டிய நாடு வந்தபோது குள்ளப்புரத்தில் தங்கியுள்ளார். அவருக்கு இரவில் தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மன்னனின் கனவில் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் தோன்றி மறைந்துள்ளார். உடனடியாக மன்னனுக்கு வயிற்று வலி தீர்ந்துள்ளது. இதனால்,ராஜ ராஜசோழன் உத்தண்ட சவுந்தராஜ பெருமாளுக்கு இங்கு கோயில் கட்டியுள்ளார்.
இங்கு உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள், பூர்ணாம்பாள், புஷ்தாயாம்பாள் ஆகிய தெய்வங்கள் உள்ளன. கோயிலின் உள் வளாகத்தில் தீர்த்த தொட்டி கிணறு உள்ளது. இதில் தீர்த்தம் எடுத்து தினமும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதில் குள்ளப்புரம், மருகால்பட்டி, சந்திராபுரம், கோயில்புரம், கன்னிமார்புரம் உட்பட சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொள்வர். இக்கோயிலுக்கு 30 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளது. அவை கிராம கட்டுப்பாட்டில் இருந்த வரை குத்தகை பணம் வசூலிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடந்தது. தற்போது சித்திரா பவுர்ணமி மற்றும் தை முதல் தேதியில் உற்சவர் ஆற்றுக்கு சென்று மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக் கோயில் இந்துஅறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு சென்ற பிறகு தேர் திருவிழா நடைபெறவில்லை. தற்போது அர்ச்சகர் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு முறையாக சம்பளமும் கிடைக்கவில்லை. கோயிலுக்கு புதிய தேர் கட்டுவதற்கு அரசு சார்பில் ரூ.14 லட்சம், பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பணிகள் துவங்கின. ஆனால், தேர் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அப்பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து குள்ளப்புரம் சங்கிலி முத்தையா கோயில் பூஜாரி எ.பாலசுப்பிரமணியன் கூறுகையில்,“இக்கோயில் தேர் கட்டும் பணியில் உள்ள தடைகளை தகர்த்து, விரைவாக பணியை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.