தேவகோட்டை: கண்டதேவியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடத்தி மரியாதை பெறுவது தொடர்பாக பிரச்னை இருந்ததால், தேவகோட்டை ஆர்.டி.ஒ. யாருக்கும் மரியாதை இல்லாமல் திருவிழாவை நடத்த உத்தரவிட்டார். இதன் படி கடந்தாண்டு திருவிழா நடந்தது. இந்தாண்டு ஒரு பிரிவினர் முதல் வாரமே திருவிழா நடத்த முடிவு செய்தனர். வழக்கம் போல் இரண்டாவது வாரமே திருவிழா நடத்த வேண்டுமெனக்கூறி மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த வாரம் காப்பு கட்டப்படவில்லை. போலீஸ் குவிக்கப்பட்டது. அதிகாரிகள் திருவிழா நடத்த அனுமதி வழங்காததால் காப்பு கட்டவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆர்.டி.ஒ. சிதம்பரம் திருவிழா நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முத்துமாரியம்மன் கோயிலில் கரகம் வைக்கப்பட்டு காப்பு கட்டுதலுடன் முளைக்கொட்டு திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கண்டதேவி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.