பதிவு செய்த நாள்
01
அக்
2015
12:10
வேலூர்: திருப்பத்தூர் அருகே, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு நடுகற்கள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் மோகன்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர் சுதாகர், ஓய்வு பெற்ற ஆசிரியர் மாணிக்கம், சமூக ஆர்வலர் தேவசேனாதிபதி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவினர், கடந்த மாதம் நடத்திய ஆய்வில், திருப்பத்தூர் அருகே காகங்கரையில் கி.பி., 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 2 நடுக்கற்களை கண்டுபிடித்தனர்.
இந்த நடுகற்கள் குறித்து மோகன் காந்தி கூறியதாவது: முதல் நடுக்கல் கல்வீடு அமைப்பில் உள்ளது. 3 திசைகளிலும் கற்களை நட்டு, மேற்கூரையாக பெரிய கல்லைப் போர்த்தி கிழக்குப் பகுதியில் நடுக்கல் காணும் விதத்தில் அமைத்துள்ளனர். இதை கல்வீடு கடுக்கல் என்று கூறலாம். அதில் உள்ள உருவத்தின் இடது கையில் வில்லும், வலது கையில் வீரவாளும், இடையில் கச்சையுடன் கூடிய குறுவாளும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வீரனின் தோற்றம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இடது காலின் ஓரத்தில் காளையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் பெண் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. இந்த நடுகல் முல்லை நல வாழ்வியலில் ஆநிரைக் கவர்தல், மிட்டல், கால்நடைகளை கைப்பற்றுதல், அதை மீட்பது போன்ற வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கிறது. வீரன் இறந்த உடன் அவன் மனைவி உடன் கட்டை ஏறியுள்ளதை இந்த நடுகல் வெளிப்படுத்துகிறது. இரண்டாவது நடுக்கல், காகங்கரை, கிழக்கு வதனவாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், செல்லாரப்பன் எனும் பெயரில் மக்கள் வழிபடுகின்றனர். இதில் வீரன் அருகாமையில் வில் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளிலும் வாளேந்தியபடி வீரன் உள்ளான். இடையில் கச்சையும், குறுவாளும், காலில் வீரக்கழலும், கழுத்தில் ஆபரணமும் அணிந்துள்ளார். இந்த நடுக்கல்லும் ஆநிரைப் போரில் இறந்தவராகவே இருக்கக் கூடும். இந்த வீரனின் இடது வலது புறங்களில் இரு பெண்கள் காட்சி தருகின்றனர். அவர்களின் கைகளில் கைப்பை போன்ற முத்திரைகள் உள்ளது. இந்த முத்திரைகள் உடன் கட்டை ஏறுவதன் அடையாளங்களாகும். இந்த இரு நடுகற்களும் காக்கங்கரைப் பகுதியில் நிகழ்ந்துள்ள போர்களைப் பதிவு செய்யும் வரலாற்று நிகழ்வுகளாக உள்ளது. இந்த நடுகற்களை அரசு பாதுகாக்கவேண்டும். இவ்வாறு, கூறினார்.