திருவண்ணாமலை: வந்தவாசி அருகே கோவில் உண்டியல் உடைத்து, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தில் பழமை வாய்ந்த பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம், 50 உள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் சண்முகம் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி கொண்டு சென்றார். நேற்று அதிகாலை கோவிலை திறக்க வந்த போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர், வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடிவருகின்றனர்.