பதிவு செய்த நாள்
25
ஜூலை
2011
12:07
ராசிபுரம்: சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனிதரின் ஆசிர் பெற்றனர். ராசிபுரம், வெண்ணந்தூர் யூனியன், மதியம்பட்டி அடுத்து சவுரிபாளையத்தில் புனித மரிய மதலேனாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி முதல் வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியாக பேய் ஓட்டும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் செல்வர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, பெரிய தேருடன் ஐந்து சிறிய தேர்கள் வலம் வந்தது. தேரின் முன் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என பலரும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையிலும், பேயின் பிடியில் இருந்து பாதுகாக்கவும் வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தியபடி வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனிதரின் ஆசிர் பெற்றுச் சென்றனர்.