பதிவு செய்த நாள்
14
அக்
2015
02:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், நேற்று முதல் நவராத்திரி பண்டிகை களை கட்ட துவங்கியுள்ளது.
இந்து மத நம்பிக்கையின்படி, சக்தியின் பல்வேறு அம்சங்களை வணங்கும் விழாவாக நவராத்திரி உள்ளது. ஒன்பது நாட்கள், ஒன்பது விதமான அலங்காரத்துடன் சக்தி வடிவான அம்மனை வழிபடுவர். ஒவ்வொரு நாளும் ஒரு வகை பிரசாதம் படைப்பதும், பக்தி பாடங்கள் பாடுவதும் நவராத்திரி விழாவின் சிறப்புகள். இதன் உச்சமாக, கொலு அமைப்பது உள்ளது. கோவில்களில் நேற்று முதல் நவராத்திரி விழா துவங்கியுள்ளது. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டன. ஒன்பது நாட்களும், மாலை, 6:00 மணிக்கு கலை நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை, மகாலிங்கபுரம் நவரச நாட்டியாலயா ஆசிரியர் கீதாவின் மாணவியரின் பரதநாட்டியம் மற்றும் ஆசிரியர் செந்தில்குமார் மாணவியரின் வீணைக்கச்சேரி நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று சிவா சங்கீதாலயா மாணவர்கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும், 15ம் தேதி மேஜிக்ேஷா 16ம் தேதி பரதநாட்டியம், 17 ம் தேதி ஆர்ய வைஸ்யா மகாசபா வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி, 18 ம் தேதி பல்சுவை நிகழ்ச்சி, 19ம் தேதி தெலுங்கில் பட்டிமன்றம் நடைபெறும். பொள்ளாச்சி விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில், ஒன்பது நாட்களும் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள், காலை 9:00 மணிக்கு ேஹாமம், யாக பூஜைகள் நடைபெறும்.