பதிவு செய்த நாள்
14
அக்
2015
02:10
திருவண்ணாமலை: ஆரணி லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், பக்தர்கள், 10ஆயிரம் தேங்காய் உடைத்து, நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஆரணி சைதாப்பேட்டை நாடக சாலை பேட்டை தெருவில், சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில், அமிர்தவல்லி சமேத லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் விழா நடத்துகின்றனர்.
அதன்படி நேற்று நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது. காலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. இரவு உற்சவ மூர்த்திகள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கை, தாரை தப்பட்டை, ஒயிலாட்டம் நிகழ்ச்சியுடன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் தங்கள் வீட்டின் முன் ஸ்வாமி வந்தபோது, அவரவர் வேண்டுதலின் படி, வீட்டுக்கு வீடு சூறை தேங்காய் உடைத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன்படி நேற்று முன்தினம் இரவு மட்டும், 10 ஆயிரம் தேங்காய் உடைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கஜேந்திர வரதராஜ பெருமாள் குழுவினரின் பக்தி பஜனை பாடல்கள், கோலாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைதாப்பேட்டை, செங்குந்த மரபினர் செய்திருந்தனர்.