பதிவு செய்த நாள்
16
அக்
2015
11:10
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அதிகார நந்திக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த அதிகார நந்தியை, அச்சு அசலாகவும், நேர்த்தியாகவும், காகிதக் கூழில் செய்து அசத்துகிறார், மயிலாப்பூரை சேர்ந்த முரளி, 55. இதுகுறித்து அவர் கூறியதாவது:கபாலீஸ்வரர் உலா வரும், ஒன்பது வாகனங்களையும், அந்த வாகனங்களுக்குரிய சுவாமி அலங்காரத்துடனும், பொம்மைகள் செய்து வருகிறேன். கருடன், நாகம், புன்னை மரம், பிட்ஷாடனர், ராவணேஸ்வரன், பூதவாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும், ஒரே மாதிரியான அலங்காரத்தில் சுவாமி வருவதில்லை. உதாரணமாக, ரிஷப வாகனத்தில், ஒரு கால் மடித்து, மறுகாலை தொங்கவிட்டபடி, சுவாமி அமர்ந்திருப்பார். அப்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் உண்டு. அவற்றை கவனத்தில் கொண்டு, மிகவும் நேர்த்தியாக நாங்கள் பொம்மைகளை செய்கிறோம்.
பீடம் எனப்படும் அடிப்பகுதி யில், தேவையான இடங்களில் மர வேலைப்பாடுகள் செய்கிறோம். பொம்மை அசையாமல் இருக்க, அலுமினிய குழாய்களை பொறுத்துகிறோம். மேலும், சுவாமிக்கு மேல், உலோக கவ்விகளை அமைத்து, அதன் மீது, பல்வேறு வேலைப்பாடுகளுடன் குடைகளை அமைக்கிறோம். சுவாமிக்கு, கை, கால்களை தனித்தனியாக செய்து, அவற்றை ஒட்டுவதால், மிக நேர்த்தியான அலங்காரம் செய்ய முடிகிறது. பீடத்தில் இருந்து, குடை வரை, இரண்டு முதல் இரண்டரை அடி உயரமுள்ள பொம்மைகளாக தயாரிக்கிறோம். மேலும், தற்போது, 63 நாயன்மார் கதைகளை பொம்மைகளாக வடித்துக் கொண்டிருக்கிறோம். திருஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவை ஆக்கிய காட்சி, மாணிக்கவாசகர் கதையில் வரும் நரி பரியாகும் காட்சி, அப்பரை கடலில் வீசும் காட்சி உள்ளிட்ட காட்சிகளை, பக்தர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -