பதிவு செய்த நாள்
20
அக்
2015
11:10
பொள்ளாச்சி: நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. நவம் என்ற சொல்லுக்கு, ஒன்பது என்றும், புதியது என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை வணங்கும் முறையும் கடைபிடிக்கப்படுகிறது. முதல்நாள் மகேஸ்வரி, இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி, மூன்றாம் நாள் வராகி, நான்காம் நாள் மகாலட்சுமி, ஐந்தாம் நாள் மோகினி வடிவம், ஆறாம் நாள் சண்டிகா தேவி, ஏழாம் நாள் சாம்பவி துர்க்கை, எட்டாம் நாள், நரசிம்ம தாரிணி, ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி என ஒன்பது நாட்களும் ஒன்பது அம்மன் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
விழாவையொட்டி, ஆண்டுதோறும் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வீடுகளில் கொலு வைத்து வழிபாடும் நடக்கிறது. இந்தாண்டும் நவராத்திரி விழாவையொட்டி, கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டு, விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, கோவில்களில், பக்தர்களை கவரும் வகையில், சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குட்பட்ட வாசவி மண்டபத்தில், பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா கீதா பிரகாஷ் மாணவர்கள் பரதநாட்டிய விழா மிகவும் கவரும் வகையில் அமைந்திருந்தது.அதில், மகிஷாசூர மர்த்தினி நடனம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. அரக்கனை வம்சம் செய்யும் விதம் பரத நாட்டியம் மூலம் வெளிப்படுத்திய விதம் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலிலும், நவராத்திரியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதில், நாச்சியார் வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதுபோன்று, ஒன்பது நாட்களும் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், பொள்ளாச்சி பகுதியே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது என்றால் மிகையல்ல... ஆன்மிகத்துடன் கூடிய கலைகளையும் வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதால், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.