கோட்டை மாரியம்மன் கோவிலில் அக்.,26ல் பாலாலயம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2015 11:10
சேலம்: பிரசித்த பெற்ற, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் வரும், 26ம் தேதி பாலாலயம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில் செயல் அலுவலர் உமாதேவி கூறியதாவது: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பிரசித்த பெற்ற கோவில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து, அம்மனின் ஆசி பெற்று செல்கின்றனர். கோட்டை மாரியம்மன் கோவிலில் பல்வேறு பகுதிகள் சிதலமடைந்து இருப்பதால், திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கோவிலின் நிலை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தொல்லியல் துறையினரின் அறிக்கையின் படி, முதலில் கோவிலில் வெளிப்புரம் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து கருவறையை அகற்றி புதிதாக அமைப்பதற்காக, மரத்திலான அம்மன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள அம்மன் சிலையில் இருக்கும் சக்தியை புதிதாக உருவாக்கப்பட்ட சிலைக்கு கொண்டு வருவதற்கு பாலாலயம் என்று பெயர். இந்நிகழ்ச்சியானது வரும், 26ம் தேதி காலை 9.30 மணியில் இருந்து 10.30க்குள் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.