பதிவு செய்த நாள்
26
அக்
2015
10:10
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே வசிக்கும், ராஜகம்பளத்தார் பிரிவினரின் குடும்ப திருமணம், 300 ஆண்டு பாரம்பரியத்துடன், ஊர் மந்தையில் மர இலை, தழை பந்தலில் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதியில் ராஜகம்பளத்தார் பிரிவினர் வசிக்கின்றனர். இவர்களின் திருமணம், 300 ஆண்டுகளைக் கடந்தும், பாரம்பரியம் மாறாமல் நடந்து வருகிறது.
ஊர் மந்தையில்...வத்தலக்குண்டு எழுவணம்பட்டியில் பங்காருசாமி, லிங்கம்மாள் ஆகியோரின் மகன் ஜெயபாலனுக்கும், கொடுவிலார்பட்டி பொன்ராம், செல்வியின் மகள் சிவசக்திக்கும், நேற்று பாரம்பரிய முறைப்படி, ஊர் மந்தையில் திருமணம் நடந்தது.காடுகளில் இருந்து பலா, உசிலை மரங்களின் இலை, தழைகளைக் கொண்டு மணமகனுக்கும், மணப்பெண்ணிற்கும் தனித்தனி பந்தல் அமைத்து, இருவரும் அமர வைக்கப்பட்டனர். காட்டில் விளையும் கம்பு, கருப்பட்டி, வெற்றிலை, பாக்கு ஆகியவை சிறிய மண் சட்டியில் வைத்து, அதற்கு பூஜை நடத்தினர்.
உறுமி, தேவராட்டத்துடன்...திருமண சடங்குகளின் போது மணப்பெண், மாப்பிள்ளை வீட்டார், தங்களது குல பெருமைகளை தெலுங்கு, தமிழில் பாட்டாக பாடினர். சடங்கு முடிந்ததும், மாப்பிள்ளை குதிரையில், மணப்பந்தலை வலம் வந்து மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.காலை, 6:00 மணிக்கு முன்பே, சடங்குகள் துவங்கி தாலி கட்டிய பின்னும் தொடர்ந்ததால், 9:30க்கு முடிந்தது.இச்சமுதாய இளைஞர்கள் உறுமி, தேவராட்டத்துடன், மணமக்களை, மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். திருமணத்தை காண, சுற்றுப்புற கிராமத்தினர் ஆர்வமாக வந்தனர்.