ராமேஸ்வரம் ஜடாயு தீர்த்தக் கோயில் நவ.18ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2015 10:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஜடாயு தீர்த்த சிவன் கோயில் கும்பாபிஷேகம் நவ., 18 ல் நடக்கிறது.இலங்கை மன்னர் ராவணனை வதம் செய்து, சீதையுடன் ராமபிரான் தனுஷ்கோடி வந்தார். அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் சோர்வு ஏற்பட்டது. இதைப் போக்க சிவபெருமான் தலையில் இருந்து வரும் நீரில் உருவான ஜடாயு தீர்த்தக் குளத்தில் நீராடினார். ஜடாயு தீர்த்தக் குளத்துடன் சிவன் கோயில் உள்ளது.இக்கோயில் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரோட்டில் காப்பு காட்டுப் பகுதியில் உள்ளது. இங்கு நீராடி, தரிசனம் பெற ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.ஜடாயு தீர்த்தக்குளம் மகாமகம் 12 ஆண்டுகளுக்கு பின் 2016 பிப்ரவரியில் நடக்கிறது. அதற்குமுன் நவ., 18 ல் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில், ரூ. 4 லட்சத்தில் கோயில் திருப்பணி நடந்தது. பணிகள் முடிந்து தற்போது கோயில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.ரோடு சீரமைப்பில் மெத்தனம்: கோயிலுக்கு செல்லும்ரோடு காப்புக்காடு பகுதியில் 1.5 கி.மீ.,க்கு சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ரோட்டை சீரமைக்க வனத்துறை அனுமதித்தது. இதற்காக நகராட்சி சார்பில் ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை.