உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு ராமநாதபுரத்தில் மாலைக்கோயில்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2015 10:10
ராமநாதபுரம்: கணவருடன் உடன்கட்டை ஏறிய பெண்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மாலைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.போர், ஊரை காத்தல், விலங்குகளிடம் சண்டையிடுதல் போன்ற காரணங்களால் இறந்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபடும் பழக்கம் சங்க காலத்தில் இருந்தே தமிழர்களிடம் உள்ளது. சில பகுதிகளில் இறந்த வீரர்களுடன் உடன்கட்டை ஏறி உயிர்மாய்த்த மனைவிகளுக்கும் நடுகல் நடப்பட்டு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடுகல் கோயிலை மாலைக்கோயில், மாலையடி, தீப்பாய்ஞ்ச அம்மன், மாலைக்காரி, சீலைக்காரி கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில்களை அவரது குடும்பத்தினருடன் ஊர்மக்களும் வழிபடும் பழக்கம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் தரவையில் 15ம் நுாற்றாண்டு மாலைக்கோயில் உள்ளது. இங்கு நிற்கும் நிலையில் வீரரின் சிற்பம் உள்ளது. பெண்ணின் சிற்பம் உடைந்துவிட்டது. அதேபோல் பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரே 2 மாலைக்கோயில்கள் உள்ளன. இதில் ஒன்று கோபுரம் இல்லாமல் 13 ம் நுாற்றாண்டு பாண்டியர்கால கட்டடக் கலை அமைப்பில் உள்ளது.
மற்றொன்றில் மொட்டை கோபுரம் உள்ளது. இதுவும், தரவையில் உள்ள மாலைக்கோயிலும் 15 நுாற்றாண்டில் விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் சாயல்குடி கொக்கரசன்கோட்டை பஸ் நிறுத்தத்தில் ஒரு மாலைக்காரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இதனை சிலர் வழிப்பட்டு வருகின்றனர்.திருப்புல்லாணி தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது: மாலைக்கோயிலில் உள்ள நடுகல்லில் இறந்த கணவர், மனைவி சிற்பம் இருக்கும். சுமங்கலியாக இறந்தவள் என்பதை சுட்டிக்காட்ட பெண்களின் கை உயர்த்தி இருக்கும். பெண்களுக்கு அணிகலன்கள் இருக்கும். கணவர்களின் உருவத்தை விட மனைவி உருவம் சிறிதாக இருக்கும். சில இடங்களில் பெண்களின் கை மட்டும் இருக்கும். இந்த பழக்கம் நாயக்கர்கள், பாண்டியர்கள் காலத்தில் அதிகமாக இருந்துள்ளது. பழமையான இக்கோயில்களை பாதுகாக்க வேண்டும், என்றார்.