பதிவு செய்த நாள்
28
அக்
2015
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நடந்த, அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சிவபெருமானுக்கு, ஒவ்வொரு நட்சத்திரத்திலும், அதற்கு உகந்த பொருட்களால் பூஜித்து வழிபடுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில், அண்ணாமலையார் கோவிலில், 100 மூட்டை அரிசியால் சமையல் செய்து, அன்னபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சாதம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோன்று அஷ்ட லிங்கங்களிலும், திருநேர் அண்ணாமலையார் கோவில், அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்வாமியை வழிபட்டனர்.