பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு மூலவர் அம்பாள், வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.