பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
விருத்தாசலம்: ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 500 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவாலயங்களில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். இந்நாளில் லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் பெரியநாயகர் சன்னதியில் பெரியநாயகர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, அரிசி மாவு, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், கலச தீர்த்தம் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் காய்கறிகள், பழங்கள், அன்னம் போன்றவற்றால் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதன்படி, 500 கிலோ அரிசி அன்னம் இளம்சூட்டில் லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையுடன், 9:00 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ஏகநாயகர் கோவிலில் நேற்று காலை 10:00 முதல் பகல் 1:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, தீபாராதனை நடந்தது. 1:00 மணிக்கு மேல் மாலை 6:00 மணிக்குள் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.