பதிவு செய்த நாள்
28
அக்
2015
12:10
ஆர்.கே.பேட்டை: பவுர்ணமியை ஒட்டி, அத்திமாஞ்சேரிபேட்டை வள்ளலார் வாரியார் முத்தமிழ் பேரவை சார்பில், நேற்று, ஜோதி தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள், கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில், வள்ளலார் வாரியார் முத்தமிழ் பேரவை சார்பில், நேற்று, ஜோதி தரிசனம் நடந்தது. கடந்த 2011 தை முதல் நாள் முதல் மாதம்தோறும் பவுர்ணமி நாளில், இங்கு ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. காலை 10:00 மணிக்கு, வள்ளலார் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஜோதி தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஜோதியை தரிசனம் செய்தனர். இதேபோல், ஆர்.கே.பேட்டை காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, பகல் 2:00 மணிக்கு, தேவாரம், திருப்புகழ் பஜனை நடந்தது.