பெங்களூருவிலிருந்து மைசூருக்கு செல்லும் வழியில் மிகவும் நெரிசலான சாலையில் அமைந்துள்ளது காலி ஆஞ்சநேயர் கோயில். கன்னட மொழியில், காலி என்றால் காற்று என்று அர்த்தம். காற்றின் மகன்தான் அனுமன். காலி ஆஞ்சநேயர் என்றால் வாயுமகன் என்று அர்த்தம். மூலவர் ராமசந்திரனை நோக்கியவாறு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் காலி ஆஞ்சநேயர். வலது கரம் அபய முத்திரை காட்ட, இடது கரத்தில் தாமரைப் பூவுடன் இருக்கிறார். வழக்கமாக தியான நிலையில் மூடி இருக்கும் அனுமனின் கண்கள், இங்கே திறந்து இருப்பதும், முகத்தில் மீசையுடன் காணப்படுவதும் வித்தியாசமான காட்சிகள். வால் நுனியில் வளைந்து இருக்கிறது. இந்த அமைப்பு அவர் சாந்த ஸ்வரூபி என்பதன் அடையாளம். வாலில் மணி கட்டப்பட்டு இருக்கிறது.