முன்பெல்லாம் மன்னர்கள் விஜய தசமியன்று, படைக்கலன்களைத் தேவிமுன் வைத்துப் பூஜித்த பிறகு தன் சேனா வீரர்கள் புடைசூழக் கீழ்த் திசை நோக்கிப் பிரயாணம் செய்து நாட்டின் எல்லையைத் தாண்டிச் சிறிது தொலைவு சென்று தங்குவர். அங்கு ஓரிடத்தில், ராஜ புரோகிதர் வாஸ்து பூஜை நடத்துவார். பின்பு அஷ்டதிக்பாலர்கள், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை வழிபடுவர். தன் எதிரி மன்னனின் உருவப் பொம்மையை நிறுவி, அதன் மார்பின் மேல் அம்பெய்தி அவனை வெற்றி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இப்படிச் செய்தால் நாடு நலம் பெறும் என்றும், அரசனுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் என்பது நம்பிக்கை. அதனால் இன்றளவும் மக்கள் விஜய தசமியன்று தங்கள் ஊரை விட்டு அண்டைப் பிரதேசங்களுக்குச் சென்று திரும்பும் வழக்கத்தை அனுசரிக்கின்றனர். இதைச் சீமா (எல்லை) ஆலோங்கன் (தாண்டுதல்) என அழைக்கின்றனர்.