பதிவு செய்த நாள்
03
நவ
2015
10:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் நவ., 23ம் தேதிக்கு பதில், 18ம் தேதி, நடக்கிறது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், முதல் கட்டமாக, பரமபத வாசல் கோபுரம், வடக்கு வாசல், கிழக்கு வாசல், கட்டை கோபுரம் உள்ளிட்ட, 11 கோபுரங்களுக்கும், சரஸ்வதி, கிருஷ்ணர், வேணுகோபாலன், நம்மாழ்வார், தன்வந்திரி, ஹயக்கிரீவர் உள்ளிட்ட, 43 உப சன்னிதிகளுக்கும், செப்டம்பர், 9ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, மூலஸ்தானம், ராஜகோபுரம், தாயார் சன்னிதி, ரங்கா கோபுரம் உட்பட, 10 கோபுரங்கள்; 15 சன்னிதிகளுக்கு நவ., 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த கும்பாபிஷேகம், நவம்பர், 18ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 22ம் தேதி கைசிக ஏகாதசி நாளாக உள்ளதால், நவ., 18ம் தேதியே கும்பாபிஷேகம் நடத்திட இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. நவ., 14ம் தேதி சனிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. 18ம் தேதி காலை, 9:15 மணி முதல், 10:15 மணி வரை கும்பாபிஷேகம் நடக்கிறது என, அலுவலர்கள் தெரிவித்தனர்.
வைகுண்ட ஏகாதசி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், டிச., 10ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்காக, நேற்று காலை முகூர்த்த கால் நடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட முகூர்த்தக்கால், ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடப்பட்டது.