பதிவு செய்த நாள்
03
நவ
2015
11:11
பொங்கலூர் : பொங்கலூர் அருகேயுள்ள, பழமையான சிவாலயத்தில், உழவார பணிகள் நடைபெற்றன. சின்னாரியபட்டி அருகே, கம்பம் என்ற இடத்தில் மாதேசிலிங்கம் எனும் சிவாலயம் உள்ளது. இது, கி.பி., 12 அல்லது, 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோவில் முன், ஒரே கல்லால் ஆன கம்பம், ஆறடி சுற்றளவு, 28 அடி உயரத்துடன் உள்ளது. கோவில் முன், 40 அடி ஆழமுள்ள தெப்பக்குளம் உள்ளது. பல ஆண்டுகளாக சிறப்புடன் விளங்கிய இக்கோவில், நாளடைவில் பொலிவிழந்தது.இங்கு, "விவித் பேஷன் உரிமையாளர் வாசுநாதன் தலைமையில், உழவார பணி மேற்கொள்ளப்பட்டது. திருமுருகன்பூண்டி சேக்கிழார் புனிதர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து, சுவருக்கு வெள்ளையடித்து, அகல் விளக்கு ஏற்றினர். சேக்கிழார் புனிதர் பேரவை நிர்வாகிகள் மூர்த்தி, பழனிசாமி, முத்து நடராஜன், கண்டியன்கோவில் ஊராட்சி துணை தலைவர் பாலசுப்ரமணி, சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் நற்பணி மன்ற தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். வாசுநாதன் கூறுகையில், ""பிரசன்னம் பார்த்து, பரிகார பூஜை செய்யப்படும். அதன்பின், குடமுழுக்கு நடத்தி, வழிபாடு செய்யப்படும், என்றார்.