நான்குநேரி : விஜயநாராயணம் மேத்தபிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டம் நான்குநேரி - திசையன்விளை ரோட்டில் ஐ.என்.எஸ். கடற்படை தளம் அமைந்துள்ள ஊர் தெற்கு விஜயநாராயணம். இவ்வூரில் அமைந்துள்ள மேத்தபிள்ளை அப்பா தர்கா மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. முஸ்லிம்கள் யாரும் வசிக்காத இவ்வூரில் அமைந்துள்ள இத்தர்காவில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடப்பது வழக்கம்.பொதுவாக முஸ்லிம்கள் பிறையை கணக்கில் கொண்டுதான் கந்தூரி விழா நடத்துவார்கள். ஆனால் இத்தர்காவில் ஆடி 16ம் தேதி அது எந்த பிறை என்றாலும் சரி அன்றுதான் கந்தூரி விழா நடக்கும். கந்தூரி அன்று தெற்கு விஜயநாராயணம் பொதுமக்கள் கந்தூரி விழாவை கொண்டாட வரும் முஸ்லிம் மக்களுக்கு தங்களது வீடுகளை வழங்கியும், அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்குகின்றனர். முஸ்லிம் இல்லாத கிராமத்தில் உள்ள இத்தர்ஹா கந்தூரி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணியளவில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்காவில் ஏற்றப்படுகிறது. பின் சிறப்பு துவா ஓதப்பட்டு எல்லோருக்கும் நேர்ச்சை வழங்கப்படுகிறது. மாலையில் இன்னிசை கச்சேரி, சமய சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணியளவில் கந்தூரியாக்கி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை முஸ்லிம் மக்களோடு தெற்கு விஜயநாராயணம் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.