கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கோவில் சன்னிதானத்தில், பக்தர்களின் மொபைல் ஃபோன் ஒலிப்பதால் ஸ்வாமி தரிசனம் செய்வதில் இடையூறு ஏற்படுகிறது. கோபி அருகே வரலாற்று சிறப்பு மிக்க பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களில் பாரியூர் ஒன்று. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு பெற்றது. வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமிருக்கும். கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்யும் பக்தர்களில் 95 சதவீதம் பேர் மொபைல் ஃபோன் கொண்டு வருகின்றனர். கோவில் சன்னிதானத்திலும் மொபைல் ஃபோன்கள் மாறி மாறி ஒலிக்கின்றன. ஸ்வாமி தரிசனம் முடியும் வரை, "சுவிட்ச் ஆஃப் செய்து; அல்லது "சைலன்ட்ல் வைத்திருக்கலாம். ஆனால், சுற்றுச்சூழலை மறந்து, சன்னிதானத்துக்குள் வைத்தே பதில் பேசவும் செய்கின்றனர். சிரத்தையுடன், மனமுருகி வழிபாடு செய்யும் மற்ற பக்தர்களின் கவனம் சிதறுகிறது. பக்தர்கள்தான் இப்படி என்றால், கோவில் பூஜாரிகள் மற்றும் குருக்கள் வைத்திருக்கும் மொபைல் ஃபோன்கள் கூட, பூஜை நேரத்தில் ஒலிப்பது வேடிக்கையாக உள்ளது. கோவில் பூஜாரிகள் தங்கள் பணி முடியும் வரை மொபைல் ஃபோனை ஆஃப் செய்து வைக்கலாம். பண்ணாரியம்மன் கோவில் வளாகத்தில் மொபைல் ஃபோன் இயங்காமல் தடை செய்யும், "ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பாரியூர் வகையறா கோவில்களிலும், "ஜாமர் கருவி பொருத்த வேண்டும்.