பதிவு செய்த நாள்
06
நவ
2015
02:11
கண்ணாடியில் முகம் பார்க்கிறோம்... அது, அழுக்காக இருந்தால், பார்க்க முடிகிறதா... சுத்தமாக துடைத்தப் பின் பார்த்தால், நன்றாக தெரியும். அத்துடன், கண்ணாடி ஆடாமல், நிலையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நம் உருவம் தெளிவாக தெரியும். சித்தம் என்பது, கண்ணாடி போன்றது; அதில், கெட்ட எண்ணம் தோன்றா விட்டால், சித்தக்கண்ணாடி சுத்தமாகும். சித்தத்தை ஒன்றிலேயே ஈடுபடுத்தினால், அது, ஆடாத நிலைத்த கண்ணாடியைப் போன்று, அதில், பரமாத்மா பிரதிபலிப்பார். கிணற்றில், ?? ஆண்டுகள், தாமிரச் சொம்பு கிடந்தது என்றால், அதை சுத்தப்படுத்த பல முறை தேய்த்தாக வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு தேய்க்கிறோமோ, அந்த அளவுக்கு அது வெளுக்கிறது; சுத்தமாகிறது. அதேபோன்று, இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு கெட்ட காரியங்களை செய்து, நம் சித்தத்தில் அழுக்கை ஏற்றிக் கொண்டுள்ளோமோ, அத்தனை நல்ல காரியங்களை செய்து, அந்த அழுக்கை நீக்க வேண்டும். நல்ல கர்மானுஷ்டானங்களை செய்வதன் மூலம், சித்த சுத்தி வரும்; நல்ல சீலங்கள் உண்டாகும். இன்றைக்கு, மட்டும் செம்பை தேய்த்து, வெள்ளை வெளேரென்று ஆக்கி விட்டால் போதுமா? நாளைக்கு, அதற்கு மறுநாள் என்று மறுபடி தேய்க்காமல் இருந்தால் என்னவாகும்... மறுபடியும் அழுக்காகிறது. அதனால், நம் சித்தத்தை விடாமல், அனுஷ்டானத்தால் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.