பதிவு செய்த நாள்
28
ஜூலை
2011
12:07
கோவை : தமிழ் மீது தீவிர பற்றுகொண்டவர், அவர் கூறும் மனித வாழ்க்கை தத்துவத்திற்கு திருக்குறளும், பாரதியாரிடம் பாடல் வரிகளும், கவிதைகளும் துணையாக நிற்கிறது. காவி உடை தரித்த அவரின் தேகத்தில், காந்த விழி பார்வையில், சமஸ்கிருதம் நுனி நாக்கில் சரளமாக ஒலித்தாலும், தமிழ் வார்த்தைகளே தாரக மந்திரமாக ஓங்கி உச்சரிக்கிறார். காவி உடை தரித்த விவேகானந்தரை போல், தேசத்தின் மீதும், கல்வி திட்டத்தின் மீதும் அக்கறையும் காட்டுகிறார். ஆன்மிக வாழ்க்கை என்றாலும், அது தான் தேசத்தின் வளர்ச்சிக்கு விதை எனக்கூறுகிறார் ஸ்ரீ ஓங்காரா நந்த சுவாமிகள். தேனி வேதபுரி ஸ்ரீ ஸ்வாமீ சித்பவாநந்த ஆசிரமம், தஷிணாமூர்த்தி வித்யா பீடம், புதுக்கோட்டை ஸ்ரீ புவநேச்வரீ அவதூத வித்யாபீடம், ஸ்ரீஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகள் ஆதிஷ்டானம், சென்னை ஸ்ரீ தத்தாத்ரேய அவதூத வித்யா பீடம் இவரது தலைமையில் இயங்கும் அமைப்புகள். இந்தியா மட்டுமின்றி, உல கம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவாற்றிவரும் ஸ்ரீ ஓங்காரா நந்த சுவாமிகள், கோவை கணபதியில், இந்தியன் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஸ்ரீஉத்தவகீதைத் தொடர் வகுப்புகளை நடத்தி வருகிறார்.
அவர் "தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி: மனித சமுதாயம் செயற்கையாக துன்பங்களை உருவாக்கி, போட்டி, பொறாமை, ஆசையால், சில நேரங்களில் தன் உயிரையே மாய்த்துகொள்ளும் நிலைக்கு செல்கிறார்களே? இதற்கு திருவள்ளுவர், பாரதியார் கூறிய உபதேசங்களை பின்பற்றினாலே போதும். சுவாமி விவேகானந்தர் கூறியது போல், உலக நாடுகள் ஒவ்வொரு பணிகள் செய்கின்றன, நம் இந்தியாவின் பணி ஆன்மிகம் மட்டுமே. நமக்கு செயற்கையான கல்வி தேவையில்லை. ஆன்மிகக்கல்வி தான் வேண்டும். நான் எந்த சமயத்தையும் சார்ந்து கூறவில்லை. பாரதியாரும், திருவள்ளுவரும் கூறுவது போல் நம் தேசத்தின் சொத்து ஆன்மிகம் தான். ஒரு மனிதனுக்கு அறிவு நலம், மன நலம், சொற் நலம், உடல் நலம், இணை நலம், உறவு நலம், பொருள் நலம் என ஏழு நலங்கள் வேண்டும். இதில், நம்மிடம் ஒன்று இல்லாவிட்டாலும், வாழ்க்கையே பிரச்னையாகிவிடும். இலங்கையில் வாழும் மக்கள், அவர்கள் எந்த சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும், அந்த சமயம் குறித்து அவர்கள் படித்து, தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு பல்வேறு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதே போல், நம் தேசத்திலும் பின்பற்றலாம். சமயம் என்பதே ஆன்மிகம் தான். இதை தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம்; நாட்டின் வளர்ச்சிக்கு ஆன்மிகம் முக்கியம் எனக்கூறினார். எனவே, ஆன்மிகம் சார்ந்த சமய கல்வி நாடு முழுவதும் உருவாக்கப்படவேண்டும். ""பாரத் பாரம்பரிய கல்வித்திட்டத்தை குழந்தை பருவத்தில் இருந்து துவக்க வேண்டும். பிஞ்சு உள்ளத்தில் நெஞ்சில் ஆழமாக பதிய செய்யச் வேண்டும். பாரதியாரும் தனது பாடல்களிலும் இக் கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார். பெற்றோரும், ஆசிரியர்களும் மாறாமல் நம் எதிர்கால சமுதாயத்தை மாற்றிட முடியாது. அப்படியானால் நம் கல்வி திட்டத்தில் மாற்றம் வேண்டுமா ? மிகப்பழமையான நம் தேசத்தின் நாட்டின் கல்வி திட்டத்தை, யுவான் சுவாங் போன்ற மேதைகளும் பார்த்து சென்றுள்ளனர். நாளந்தா பல்கலை., கல்வி குறித்து உலகத்திற்கே தெரியும். ஐந்து முதல் 25 வயது வரை நல் வழிநடத்தும் கல்வி திட்டம் இருந்தது. மொகலாயர் முதல் வெள்ளையர் வரை நம் நாட்டை ஆண்டபோதும் நம் கல்வித்திட்டம் சிறப்பாகவே இருந்து வந்தது. ஏன்? சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை நீடித்தது. ஆனால், மெக்காலன் கல்வி முறை வந்தபின் தான், கல்வியின் தரம் கீழிறங்கிவிட்டது. நம் கல்வித்திட்டம் எப்படி இருக்க வேண்டும்? திருவள்ளுவரின் திருக்குறள் முழுமையாக சொல்லும் கல்வியாக மட்டுமில்லாமல், அது போல் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டவேண்டும். அதை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஆங்கில வழிக்கல்வி மீது கவனம் செலுத்துகிறார்களே...? இவையெல்லாம் போலியானது. அரசு சொல்வதை மக்கள் கேட்பது சர்வாதிகாரம், மக்கள் சொல்வதை கேட்பதே ஜனநாயகம், எதிர்கால சமுதாயத்தை காக்க கல்வி போன்ற பிரச்னைகளுக்காக மக்கள் போராட வேண்டும் என்பது தான் என் கருத்து ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாமல் செல்லும் இளைஞர்களுக்கு...? ஒவ்வொரு இளைஞனும் நம் தேசத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும். இலக்கியம், இதிகாசங்களை புரிந்து வைத்திருக்க வேண்டும். புலன் இன்பங்களில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். சுருக்கமாக சொன்னால், அப்துல் கலாம் கருத்தை பின்பற்ற வேண்டும். ஆன்மிகமே நாட்டின் வளர்ச்சி என்பது எப்படி சாத்தியம்? பத்மநாத சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் வைக்கப்பட்டிருந்ததே பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு தங்கம், வைரம், வெள்ளி, இவை அனைத்தும் சொற்பமானதே. இதைவிட செல்வங்கள் நம் தேசம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்தன. கடவுள் மீது கொண்ட பக்தியால் நம் முன்னோர்கள் கோவிலுக்கு பொன்னும், பொருளும் வாரி கொடுத்துள்ளனர். அப்படியென்றால், நம் தேசம் எவ்வளவு செல்வ செழிப்புமிக்கதாக இருந்திருக்ககூடும். ஏன் ? நம்மவர்கள் போரிடுவதற்காகவும் கோவிலிலிருந்து தான் பொருட்களை எடுத்து செலவு செய்துள்ளனர். நம் தேசம் ஆன்மிகத்தில் எவ்வாறு வளர்ச்சி பெற்றிருந்தது இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். நம் மீது படையெடுத்தவர்கள் கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே வந்தனர். கீதா உபதேசங்கள் தற்கால வாழ்க்கை முறையில் பின்பற்றினால் மனித வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கீதை படித்தவர்கள் கூறுகின்றனரே ? இதில், எந்த தயக்கமும் இல்லை. இதே போல், உத்தவ கீதையிலும் கிருஷ்ணன் கூறியுள்ளார். சிறந்த பக்தரும், கிருஷ்ணரின் உறவினருமாகிய உத்தவர்; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் உபதேசம் கேட்ட போது, பகவான் கூறியது தான் "உத்தவ கீதை ; இது ஸ்ரீ மத் பாகவத மகாபுராணத்தில் 11வது ஸ்கந்தத்தில் அமைந்துள்ளது. நுண்ணறிவாற்றல் குறைந்தவர்களும் கூட புரிந்து கொள்ளும் வகையில் உபதேச கருத்துகள் இதில் அமைந்துள்ளன. வாழ்க்கையின் குறிக்கோளைத்தெளிவுப்படுத்திக் கொள்ளுதல், குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகள், இறைவனைப்பற்றி இலக்கணங்கள், பக்தியை வளர்ப்பதற்கான வழிமுறைகள், பக்தர்களின் குணநலன்கள், சத்சங்கத்தின் அருமை, பெருமை ஆகியன எளிமையாகவும், தெளிவாகவும் உணர்த்துகிற ஆன்மிக அறிவு நூலாக உத்தவ கீதை விளங்குகிறது.இவ்வாறு, ஸ்ரீ ஓங்காரா நந்த சுவாமிகள் கூறினார்.