பதிவு செய்த நாள்
07
நவ
2015
10:11
தேனி: சோதனை மேல் சோதன... போதுமடா சாமி... மோதனைகள் தொடரும் போது தான் மனம் இறைவனை நாடுகிறது. போட்டிகளும், பொறாமைகளும் சூழ்ந்த உலகில், அமைதி வாழ்வுக்கு வழிகாட்டுவது இறை பக்தி மட்டுமே. கோயில்களுக்கு சென்று வழிபடும்போது நாம் கேட்டதெல்லாம் கிடைத்து விடுகிறதா. இல்லையே...இக்குறையை போக்குகிறது அல்லிநகரத்தில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயில்.
அல்லிநகரம் கிராம கமிட்டியால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் மூலவரான வரதராஜபெருமாமின் பெருந்தேவியாக தாயார் வலது புறத்திலும், ஆண்டாள் இடபுறத்திலும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் முன்புறம் ஆஞ்சநேயர், ராமானுஜர், சக்கரத்தாழ்வார் சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலுக்குள் மச்சவதாரம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமர், பலராமன், கிருஷ்ணன், கல்கி அவதாரம் என 10 அவதாரங்களில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
இக்கோயில் பரம்பரை பட்டர் மூர்த்தி கூறுகிறார்:இங்கு 12 ஆழ்வார்கள், அவர்களது 8 சீடர்களின் திருநட்சத்திர பிறந்த நாட்களில் அவரவர்கள் பாடிய பாசுரங்கள் பாடி வேண்டுவது சிறப்பு. இவ்வாறு பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டால் அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடுகிறது என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு ஏகாதசியில் சுவாமிக்கு திருமஞ்சனம், துவாதிசியில் ததி ஆராதனை, அன்னதானம் நடைபெறும். ராமநவமி உற்வத்தின் 10 நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமியில் கிருஷ்ண வேடத்துடன் சுவாமி புறப்பாடு, உரியடித் திருவிழா கோலாகலமாக நடக்கும். மார்கழியில் பரமபத வாசல் திறப்பும் அன்று இரவு முழுவதும் உபன்யாசம், பரத நாட்டியம் விடிய, விடிய நடைபெறும். மார்கழி மாதம் 30 நாட்களும் நடைபெறும் ஆண்டாள் நோன்பில் பெண்கள் விரதம் இருந்து திருப்பாவை பாடல் பாடுவது வழக்கம். 30வது நாளில் கோயிலில் பெண்கள் பக்தர்களுக்கு புதுத்துணி, மஞ்சள், குங்குமம் வழங்கி மகிழ்வது சிறப்பான ஓன்று. என்றார் மேலும் விபரங்களுக்கு 99659 99479 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.