குருவித்துறை: சோழவந்தான் அருகே குருவித்துறை சுயம்பு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ஐப்பசி தைலக்காப்பு உற்சவம் நடந்தது. வைகை கரையிலுள்ள இக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரே சந்தன மரத்தாலான பூதேவி, ஸ்ரீதேவியருடன் நின்ற கோலத்தில் பெருமாள் உள்ளார். இங்குள்ள மூலவருக்கு பல்வேறு மூலிகைகளாலான தைலக் காப்பு அபிஷேகம் நடக்கும். ஆண்டுதோறும் தீபாவளி முதல் நாள் துவங்கி, வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் வரை தைலக்காப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிப்பார். தைலக்காப்பு அலங்காரத்தில் தேவியருடன் பெருமாள் அருள்பாலித்ததை ஏராளமானோர் கண்டு களித்தனர். ரங்கநாதபட்டர் தைலபிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத், முதன்மை கணக்கர் வெங்கடேஷன் செய்தனர்.