பதிவு செய்த நாள்
16
நவ
2015
11:11
பழநி: அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பழநியில் நாளை நடைபெற உள்ளதால் அன்று இரவு தங்கரதபுறப்பாடு கிடையாது.பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.,12முதல்18 வரை நடக்கிறது. நாளை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது. தங்கரதம் நிறுத்தம்மாலை 5.30 மணி சாயரட்சை பூஜை முன்னதாக பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. பகல் 2.30 மணிக்கு சின்னக்குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கியவுடன் சன்னதி நடைசாத்தப்படுகிறது. நாளை இரவு 7 மணிக்கு தங்கரதப்புறப்பாடு கிடையாது.
திருஆவினன்குடியில் பராசக்திவேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6 மணிக்குமேல் முருகப்பெருமான் நான்கு கிரிவீதிகளிலும் தாரகாசூரன், பானு கோபன்சூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. நவ.,18ல் மலைக்கோயிலில் காலை 10.30 மணிக்குமேல் 12 மணிக்குள் சண்முகர், வள்ளி தேவசேனாவிற்கும், மாலை 6 மணிக்குமேல் இரவு 7.30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானைக்கும் திருக்கல்யாணமும், சுவாமி தங்க குதிரை வாகனத்தில் திருவுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் (பொ) மேனகா செய்கின்னர்.